வேதத்தின் வெளிச்சம்

சோதோம் கொமோரா

ஆதியாகமம் 19:4–5-ல், லோத்து தன் வீட்டில் விருந்தினர்களை வரவேற்றபோது, சோதோமின் ஆண்கள் அவரது வீட்டைச் சூழ்ந்து, அந்த விருந்தினர்களுடன் உறவு கொள்ள அவ்விருந்தினர்களை தங்களிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தியதாக வாசிக்கிறோம். இந்த அசுத்தமான நிகழ்வு, சோதோம் மற்றும் கொமோராவின் ஒழுக்கக் கேடான பாவக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. 


ஆதியாகமம் 13:13-ல், “சோதோம் மனிதர் கர்த்தருக்கு முன்பாகப் பாவிகளாயிருந்தார்கள்” என்று முன்னமே அவர்களின் பாவ வாழ்க்கையை குறித்து குறிப்பிட்டுள்ளது. ஒழுக்கக் கேடும், அநீதியும் சோதோம் கொமோரா மக்கள் மத்தியில் நிறைந்து காணப்பட்டது. கர்வம், ஆகாரத் திரட்சி, ஏழைகளைப் புறக்கணித்தல் போன்ற பாவச் செயல்கள் சோதோமின் பாவங்களாக எசேக்கியேல் 16:49-ல் குறிப்பிட்டுள்ளது.


 ஆதியாகமம் 18:20-ல், “சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்” என்று குறிப்பிட்டிருப்பது, அந்த நகரங்களில் நடந்த வன்முறை மற்றும் அநியாயச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் தேவனின் கவனத்தை ஈர்த்தது என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

 

ஆதியாகமம் 19:24-ல், “அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணினார்” என்று வாசிக்கிறோம். சவக்கடல் அருகே நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட கிமு 1900 வருஷத்தைச் சார்ந்த எரிந்த அடுக்குகள் மற்றும் கந்தகக் கறைகள் இந்தத் நிகழ்வை உறுதிப்படுத்துகிறது.


சோதோம் கொமோராவின் அழிவு பாவத்திற்கு எதிரான தேவனின் நிலைப்பாட்டையும், பாவத்தைத் தண்டிக்கும் தேவனின் தன்மையையும் தெளிவாகக் குறிக்கிறது. 

ஒரு சமுதாயம் அசுத்தம், ஒழுங்கீனம், கொடுமை போன்ற செயல்களை இயல்பானவைகளாக மாற்றித் தேவசித்தத்திற்கு எதிராகச் செயல்படும்போது தேவன் எவ்விதமாய் செயல்படுகிறார் என்பதை இச்சம்பவம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. தேவன் நீடிய பொறுமையும் இரக்கமும் உள்ளவராய் இருப்பினும், பாவம் பெருகும்போது மக்களைத் தண்டிக்கிறவராய் இருக்கிறார்.


இந்நகரங்களின் அழிவு அனைத்து தலைமுறைகளுக்கும் எச்சரிக்கையாக உள்ளது. இன்று நாம் நம்மிடையே காணும் நச்சான பாவக் கலாச்சாரம் சோதோமின் பாவக் கலாச்சாரத்திற்கு ஒத்ததாகும். கிறிஸ்துவைச் பின்பற்றுகிற நாம் இந்த உலகில் உப்பாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்மைச் சுற்றியுள்ள பாவக் கலாச்சாரத்தின் மத்தியில் நம் கறையற்ற வாழ்க்கை மூலம் உலகில் தாக்கம் ஏற்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கக் கேடு நிறைந்த உலகில், தேவபக்தியுடன் வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருந்தாலும், நம்முடைய வாழ்வை காத்துக்கொள்ள நாம் தேவனிலும், தேவனின் வார்த்தையிலும் வேரூன்றி இருக்கிறோமா என்று அவ்வப்போது ஆராய்ந்து பார்த்து, சரிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.


உண்மையான விசுவாசம்

ஆதியாகமம் 15:6-ல், ஆபிராம் தேவனை விசுவாசித்தார் என்றும், அது அவருக்கு நீதியாகக் கருதப்பட்டது என்றும் வாசிக்கிறோம். பாதை தெளிவாக இல்லாவிட்டாலும், உண்மையான விசுவாசம் எப்போழுதும் கீழ்ப்படிதலுள்ள செயலுக்கு வழிவகுக்கிறது என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நிரூபிக்கிறது. தேவன் ஆபிராமை தனது தாயகத்தையும், குடும்பத்தையும் விட்டு வெளியேற அழைத்தபோது (ஆதியாகமம் 12:1), அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். 
விசுவாசத்தினாலே, ஆபிரகாம், பின்னர் தான் சுதந்தரமாகப் பெறவிருந்த இடத்திற்குச் செல்ல அழைக்கப்பட்டபோதுஅவர் எங்கே போகிறார் என்று தெரியாவிட்டாலும் கீழ்ப்படிந்து சென்றார் (எபிரெயர் 11:8). சாத்தியமற்றதாகத் தோன்றியபோதும் கூட, ஆபிரகாம் தேவனின் வாக்குதத்தங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அவரின் வாழ்க்கை குறிப்பிடுகிறது.

ஆபிரகாமும், சாராவும் குழந்தை இல்லாதவர்களாகவும், குழந்தை பெறும் வயதைக் கடந்தவர்களாகவும் இருந்தபோதிலும், ஆபிரகாம் பல தேசங்களுக்குத் தந்தையாக மாறுவார் என்ற தேவனின் வாக்குத்தத்தத்தை நம்பினார். வாக்குத்தத்தத்தின் மகனான ஈசாக்கை பலியிடும்படி தேவன் ஆபிரகாமிடம் கேட்டபொழுது ஆபிரகாமின் விசுவாசம்  மிகப்பெரியளவில் சோதிக்கப்பட்டது. தேவைப்பட்டால் தேவன் ஈசாக்கை மரித்தோரிலிருந்து எழுப்ப முடியும் என்று நம்பி, மிக கடினமான சோதனையிலும் ஆபிரகாம் தாமதமின்றி தேவனுக்கு கீழ்ப்படிந்தார் (எபிரெயர் 11:17–19). தேவனின் கட்டளைகளுக்யினங்கி ஆகாரையும் இஸ்மவேலையும் அனுப்பி வைத்தது முதல், விருத்தசேதன உடன்படிக்கையை உண்மையாகக் கடைப்பிடித்தது வரை ஆபிரகாமின் கீழ்ப்படிதல் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்டது. ஆபிரகாமின் விசுவாசம் நிலையான கீழ்ப்படிதல் மற்றும் சரணடைதல் மூலம் உண்மையானதாகவும், உயிருள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டது.

நம்முடைய விசுவாசம் நமது செயல்கள் மூலம் நிருப்பிக்கப்படாவிட்டால், அது செத்த விசுவாசம் அல்லது செயலற்ற விசுவாசம் என்று யாக்கோபு 2:17-ல் இருந்து நாம் புரிந்துகொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவ்வார்த்தைகளின்படி வாழும்போது நம் வாழ்க்கை உறுதியான அடித்தளத்தில் கட்டப்பட்டதாக அமையும்.  அன்பின் மூலம் தன்னை வெளிப்படுத்தும் விசுவாசமே முக்கியம் என்று கலாத்தியர் 5:6 நமக்குக் கற்பிக்கிறது.  விசுவாசத்தின் மூலம் கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டாலும், நற்கிரியைகளுக்காகக்  கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டுள்ளோம் என்பதை எபேசியர் 2:8-10 நமக்கு தெளிவுப் படுத்துகிறது

பைபிள் — ஒரு அறிமுகம்

பைபிள் என்ற சொல்லுக்கு அர்த்தம் "புத்தகங்கள்" அல்லது "ஒரு புத்தகத் தொகுப்பு" என்பதாகும். பைபிளில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.  இதில் 39 பழைய ஏற்பாட்டிலும், 27 புதிய ஏற்பாட்டிலும் உள்ளன.  இந்தப் புத்தகங்கள் சுமார் 40  வெவ்வேறான நபர்களால் ஏறக்குறைய 1500 ஆண்டுகளாக எழுதப்பட்டன. முதல் ஐந்து புத்தகங்கள் மோசேயால், சுமார் கிமு 1400ல் எழுதப்பட்டன. பழைய ஏற்பாட்டின் மற்ற புத்தகங்கள் அடுத்த 1000 ஆண்டுகளில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் கி.பி. 40 முதல் கி.பி. 90 வரையான காலகட்டத்தில் எழுதப்பட்டன. பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டன.

கிமு 450ஆம் ஆண்டில், பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் தொகுக்கப்பட்டு, எபிரேய மொழியில் பழைய ஏற்பாட்டு  உருவானது. கிமு 250க்குப் பிறகு, எபிரேய பைபிள் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இது செப்டுவாஜின்ட் (Septuagint) என அழைக்கப்படுகிறது. செப்டுவாஜின்ட் என்பது "எழுபது" என்று பொருள்படும். கிரேக்க மொழிபெயர்ப்பில் 72 யூத அறிஞர்கள் ஈடுபட்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. இப்போது பழைய ஏற்பாட்டில் காணப்படும் புத்தகளின் வரிசை முறை அப்போது முதல் அமலில் உள்ளது. பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆதியாகமம் முதல் எஸ்தர் வரை வரலாற்றுப் புத்தகங்கள் என்றும், யோபு முதல் உன்னதப்பாட்டு வரை கவிதைப் புத்தகங்கள் என்றும், எசாயா முதல் மல்கியா வரை தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் என்றும்  பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளில் கிறிஸ்துவை குறித்தும் கிறிஸ்துவுக்கு பின் எவ்வாறு சபை ஆரம்பமானது என்பது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் காணப்படும் புத்தகங்கள் அக்காலத்தில் அப்போஸ்தலர்கள் சபைகளுக்கும தனிநபர்களுக்கும் எழுதிய நிருபங்கள் ஆகும். வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கடைசி நாட்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள்குறித்து எழுதப்பட்டுள்ளது. இன்று நம்மால் பயன்படுத்தப்படும் அத்தியாயப் பிரிவுகள் சுமார் கி.பி. 1227இல் Stephen Langton என்பவரால் உருவாக்கப்பட்டன. 1382ஆம் ஆண்டு வெளியான Wycliffe English Bible இந்த அத்தியாயப் முறையை முதலில் பயன்படுத்தியது. இந்தப் பிரிவு முறை வசனங்களை எளிதாகத் தேட உதவுகின்றன.

பைபிள் அச்சிடுதல் 1455ஆம் ஆண்டு Gutenberg Bible உடன் ஆரம்பமானது. அதற்கு முன் பைபிள் papyrus (நீர் நிலைப் பயிர்கள்) மற்றும் parchments (மிருக தோல்) இல் எழுதப்பட்டது. பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இன்று இல்லை. இப்போது உள்ளவை கையெழுத்துப் பிரதிகளின் பிரதிகள் ஆகும். 14,000-க்கும் அதிகமான பழைய ஏற்பாட்டு கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துணுக்குகள்  இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  அதேபோல், புதிய ஏற்பாட்டு   கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துணுக்குகள் ஏறக்குறைய 25,000 உள்ளன. முழு பைபிளின் மிகப் பழமையான கையெழுத்துப் பிரதி Codex Vaticanus ஆகும். அந்தப் பிரதி  நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பார்ச்ச்மென்ட் பிரதியாகும்;

இது தற்போது Vatican  நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. தற்போது, முழுமையான பைபிள் உலகெங்கிலும் ஏறக்குறைய 756 மொழிகளில் உள்ளது. அது தவிற புதிய ஏற்பாடு  ஏறக்குறைய 1726 மொழிகளில் உள்ளது.  சுமார் 4,150 அதிகமான மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 3,800 மொழிகளில் இன்னும் எந்தப் பைபிள் மொழிபெயர்ப்பும் இல்லை. 

சுயநலம் நாடல்
 
ஆதியாகமம் 11:4-ல், அக்கால மக்கள் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு நகரத்தையும் கோபுரத்தையும் கட்ட ஒன்றுகூடியதைப் பற்றி வாசிக்கிறோம். பாபேலில், கீழ்ப்படியாத மனிதகுலம் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு பெயரை ஏற்படுத்தத் தேவனுக்கு பிரியமில்லாத முயற்சிகளை மேற்கொண்டது. தேவன் அவர்களின் மொழிகளைக்  வெவ்வேறாக மாற்றினார்.ஆதலால், அவர்களால் தொடர்ந்து அந்தக் கோபுரத்தைக் கட்ட முடியாமல் போயிற்று.அவர்கள் அங்கிருந்துசிதறடிக்கப்பட்டார்கள். அவர்களின் நோக்கங்கள் தங்களுக்கு பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே தவிர தேவனுக்கு மகிமை கொண்டு வருவதாக அமையவில்லை.

தேவனுக்கு பயப்படாமல் நம்முடைய சுய மகிமைக்காக நாம் செயல்படும்போது நம்முடைய வாழ்க்கையின் முடிவு என்னவாகும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.ஒரு நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவது தவறல்ல, ஆனால் அவர்கள் ஒன்று கூடி தங்களுக்கு பெயர் உருவாக்க ஒரு கோபுரத்தைக் கட்ட வேண்டும்  என்ற அவர்களின் திட்டம்  அவர்களைக் குறித்த தேவனின் விருப்பத்திற்கு முற்றிலும் புறம்பானது. பூமியில் அவர்கள் பழுகி பெருக வேண்டும் என்ற தேவனின் கட்டளையை அவர்கள் வெளிப்படையாக மீறினார்கள். பெருமை மற்றும் தேவபக்தியற்ற இலட்சியம் அவர்களை  இச்செயல்களை செய்ய வழி நடத்தியது.

முன்னேற்றத்திற்காகத் தேவனை நம்பி அவருடைய வழிகளைப் பின்பற்றுவதற்கு பதிலாகத் தங்கள் திறன்களையும், அனுபவங்களையும் சார்ந்து இருந்தார்கள்.தேவன் நமக்கு வகுத்த பாதைகளிலிருந்து நாம் விலகி  மாற்று பாதைகளில் செல்லும்போது தேவன் நம் வாழ்வில் குறுக்கிடுகிறார்  என்பதை பாபேல் கோபுரம் நமக்குக் கற்பிக்கிறது. லூக்கா 1:51-ல்,இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார் என்று வாசிக்கிறோம். தேவன் பெருமையை அல்ல, மனத்தாழ்மையை விரும்புகிறார் என்பதைக் இது காட்டுகிறது.பெருமையும், சுயமகிமை தேடலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.தன்னலத்தால் சுயமகிமையை தேட நாம் முயற்சிக்கும்போது அது நம் வாழ்வில் அழிவையோ அல்லது தேவ கோபத்தையோ வரவழைக்கும்.நாம் அறிந்தோ அறியாமலோ, நம்மை நாம் உயர்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தேவன் குறுக்கிடுகிறார்.

யாக்கோபு 4:6-ல், தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக என்று பிலிப்பியர் 2:3–4 ஆலோசனை அளிக்கிறது. நாம் மனத்தாழ்மையைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்மைச் சுற்றியுள்ள உலகமும் நமது சமூகமும் நம்முடைய உள் மனதில் சுயநலத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளது. மற்றவர்கள் நலனைவிட நாம் நம் சுயநலனை பேணுவதில் ஆர்வம் காட்டுவது  பெரும்பாலும் நம் வாழ்வில் உடைந்த உறவுகளையும், காயப்பட்ட இதயங்களையும் உருவாக்குகிறது. சுயநலம் நாடும் மனப்பான்மை குழப்பத்திற்கும் சண்டை சச்சரவுக்கும் வழி வகுக்கும். சுயநலம் நாடல் ஒழுக்கச் சிதைவுக்கும், கடைசிகால மக்களின் பண்புக்கும் அடையாளமாகும்.

கடைசி நாட்களில் மக்கள் சுயபிரியர்களாய்  இருப்பார்கள் என்று 2 தீமோத்தேயு 3:2 இல், எழுதப்பட்டுள்ளது. சுயநலம் நாடலை அகற்ற வேண்டும் என்று வேதபுத்தகம் நமக்குத் தெளிவாகக் வலியுறுத்துகிறது. சுயநலம் நாடலின் பாதிப்புகளை அறிந்து மனந்திரும்பி அத்தன்மையிலிருந்து விடுப்பட தேவன் நமக்கு உதவி செய்வராக. ஆமேன். 

தேவனின் தயை
 
நமது அன்றாட வாழ்வில், நாம் அடிக்கடி மற்றவர்களின் தயையை நாடுகிறோம். தேவனின் தயையிற்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோம். சிலருடைய வாழ்க்கையில், தேவனின் தயை தெளிவாக வெளிப்படுகிறது. நமது சமுதாயம், அத்தகைய தயை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுகிறது.

வேதாகமத்திலும், நிஜ வாழ்விலும் தேவ தயையைப் பெற்றவர்கள் மிகக் குறைவான அளவிலேயே உள்ளனர். நமது வாழ்வில் தேவனின் தயை இருக்கும் போது, ​​நம் கைகளின் செயல்கள் ஆசிர்வதிக்கப்பட்டும், மற்றவர்களுக்கு நம் வாழ்வு ஆசீர்வாதத்தின் வாய்காலாகவும் அமையும். தேவனின் தயையை உரிமை கோர முடியாது என்பதும், தேவனின் தயையைச் சம்பாதிக்க முடியாது என்பதும் உன்மையானாலும், தேவனுடனான நமது உறவு உண்மையாக இருக்கும்போது, தேவனின் தயை நம் வாழ்விலும் வெளிப்பட முடியும். ஆதியாகமம் 6:8-ல், நோவா கர்த்தருடைய பார்வையில் தயை பெற்றதைப் பற்றி வாசிக்கிறோம். அக்கிரமம் நிறைந்த மக்கள் மத்தியில், நோவா நீதிமானாகவும், தேவனுக்குக் கீழ்படிகிறவனாகவும், குற்றமற்றவனாகவும் காணப்பட்டான்.

நோவாவின் வாழ்க்கை விசுவாச வாழிவிற்குச் சான்றாக உள்ளது. தேவன் தனது திட்டத்தை நோவாவிடம் தெரிவித்தபோது, ​​தேவனின் திட்டத்தை நிறைவேற்ற நோவா தனது குடும்பத்தினருடன் தன்னை ஒப்புக்கொடுத்தான். பேழையைக் கட்ட நோவாவும் அவன் குடும்பத்தினரும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்க வேண்டியிருந்தது. தேவனின் திட்டத்தை நிறைவேற்ற நிறையத் துன்பங்கள், கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் விசுவாசம் தேவைப்பட்டது. நோவாவைப் போலவே, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, நம் மூலம் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிக்கும்போது, ​​தேவனின் தயை நம் வாழ்விலும் வெளிப்படும். லூக்கா 1:30-ல், மரியாள் தேவனின் தயையைப் பெற்றதைப் பற்றி வாசிக்கிறோம். தேவனின் குமாரனை உலகிற்குக் கொண்டுவர தேவன் மரியாளை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவளுடைய வாழ்க்கை மனத்தாழ்மைக்கும், கீழ்ப்படிதலுக்கும் சான்றாக இருந்தது. தேவன் பெருமை உள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார். மனத்தாழ்மை நம்மைத் தேவனிடம் நெருங்கி வாழச் செய்வதோடு, தேவனின் தயையும் பெற உதவும். தேவனின் தயையைப் பெற்ற வாழ்க்கை வளமானதாகும்.

தேவனின் தயையைத் தேடும் வாழ்க்கை முறை, நம் வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். தேவன் அத்தகைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வழியாக நம்மை வழிநடத்துவாராக.
 

 
துன்மார்க்க இருதயம்
 
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” என்று ஆதியாகமம் 6:5,6 கூறிப்பிடுகிறது. தேவன் பாவத்தை எப்படிப் பார்க்கிறார் என்றும், நம்முடைய மீறுதல்கள் அவரது கவனிப்பில் எவ்வாறு உள்ளது என்றும் இந்த வசனங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

தேவன் நீதியுள்ளவர். தேவன் நீதி உள்ளவர் என்பதால் அவர் பாவத்தைத் கண்டும் காணாதவர் போல் இருக்க மாட்டார். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்படியாமல் பாவம் செய்பவர்களை அவர் தண்டிக்கிறார். பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தேவன் துன்மார்க்கரை அழித்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் அக்காலத்து ஜனங்களைவிட எந்த வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. இப்பொழுதும் நம்முடைய இருதயத்தின் நினைவுகளும் நம் வாழ்வின் செயல்பாடுகளும் அநேக முறை தேவனுக்குப் பிரிய மற்றவைகளாகவே காணப்படுகிறது. நம்முடைய பிறப்பிலிருந்தே பாவம் நம்முடைய மனித இயல்பிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது. அக்கிரமத்தின் ஆக்கிரமிப்பால் சிதைந்த இருதயம் அனைத்து வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கும் ஆதாரமாக மாறியுள்ளது.

துன்மார்க்கமான கீழ்ப்படியாத இருதயம் தேவ அதிகாரத்தை மீறுவதாகவும், தேவ சித்தத்திற்கு முரண்பாடானதாகவும் உள்ளது. எரேமியா 17:9, எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்று நமக்குச் சொல்கிறது. தீய, பாவமான மற்றும் தேவபக்தியற்ற எண்ணங்கள் இருதயத்தில் தோன்றி, துன்மார்க்க வாழ்க்கை மற்றும் தேவபக்தியற்ற நடத்தைகளுக்கு வழிவகுக்கிறது. மாற்கு 7:21-23 வசனங்களிலிருந்து, மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்.

எரேமியா 17:10, தேவன் இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறார் என்று கூறுகிறது. இதன் பொருள் அவருடைய பார்வைக்கு மறைவானது ஒன்றும் இல்லை என்பதாகும். துன்மார்க்க இதயத்திலிருந்து தோன்றும் நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் சிந்தனைகள் தீமை நிறைந்தாகவும், தேவனின் பார்வையில் விரும்பத் தகாததாகவும் காணப்படுகிறது. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28:13, நமக்குத் சொல்கிறது. நாம் நம் மீறுதல்களை நியாயப்படுத்தி, எப்போதும் போல் நம் வாழ்வை தொடரலாம் அல்லது நம் வாழ்வை சுய பரிசோதனை செய்து, தவறுகளிலிருந்து மனந்திரும்பி, தேவனின் வழிகளைச் சார்ந்து அவருடைய சித்தத்திற்கு உட்பட்டு, நம் வாழ்வை அமைக்கலாம்.

இத்தகைய முடிவு இக்கால வாழ்வை மட்டும் அல்லாது நம்முடைய மரணத்திற்குப் பின்னான வாழ்வையும் தீர்மானிக்கிறது. தேவ சித்தத்திற்கு ஏற்ப நம்முடைய இருதயங்களைச் சீரமைக்க உதவுவாராக. ஆமென் 
 

 
ஏற்கத்தக்க பலி
 
காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தாகவும, ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளில் கொழுமையானவைகளில் சிலவற்றைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்ததாகவும் ஆதியாகமம் 4:3,4 நமக்கு அறிவிக்கிறது. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தாகவும் நாம் அறிகிறோம். தேவன் காயீனின் காணிக்கையை நிராகரித்ததற்கான சரியான காரணம் நமக்குத் தெரியவில்லை என்றாலும், தேவனுக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொடுக்கும் நடைமுறை மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே நடந்து வருகிறது என்றும், தேவன் தனது விருப்பப்படி அதை ஏற்றுக்கொள்கிறார் அல்லது நிராகரிக்கிறார் என்றும் இந்தச் சம்பவம் நமக்குச் சொல்கிறது. பாவங்களுக்குப் பரிகாரம் செய்து தேவனுடன் ஒரு உறவை ஏற்படுத்துவதற்காகப் பலிகள் அக்காலங்களில் செலுத்தப்பட்டன.

இஸ்ரவேலர் தகனபலி, பாவநிவாரணபலி, குற்றநிவாரணபலி, சமாதானபலி, தானியபலி போன்ற பல்வேறு வகையான பலிகளைச் செலுத்தினார்கள் என்று பழைய ஏற்பாடு நமக்குத் தெரிவிக்கிறது. பாவத்தின் விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கும் தேவனுடனான உறவைப் புதுப்பிப்பதற்கும் பலிகள் ஒரு விடையாகக் கருதப்பட்டன. சிலுவையில் இயேசு கிறிஸ்து நிறைவேற்றின பாவ பரிகாரம், நமது பாவத்திற்கான பலியின் தேவையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் என்று எபிரெயர் 10:10 கூறுகிறது.

நாம் நம் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை என்று ரோமர் 12:1-ல், வாசிக்கிறோம். நமது எண்ணங்கள், நோக்கங்கள், முடிவுகள், வார்த்தைகள் மற்றும் நடத்தைகள்மூலம் தேவனை மகிமை படுத்தவும், தேவனின் சித்தத்தைச் செய்யவும் நம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, ​​நாம் தேவன் ஏற்கத்தக்கபலியை செலுத்துகிறவர்களாய் இருப்போம். தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவன், நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணியார் என்று சங்கீதம் 51:17-ல், வாசிக்கிறோம்.

பாவத்தால் கறைப்பட்ட வாழ்க்கைக்காக நாம் மனம் வருந்தி, தேவனிடம் திரும்பும்போது, ​​நாம் தேவன் ஏற்கத்தக்கபலியை செலுத்துகிறவர்களாய் இருப்போம். தேவனுடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை கிறிஸ்து மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் என்று எபிரெயர் 13 :15 குறிப்பிடுகிறது. நாம் நன்றி அறிதல் உள்ளவர்களாய் இருந்து, தேவனுக்கு நன்றியுடன், துதியைச் செலுத்தும்போது, ​​நாம் தேவன் ஏற்கத்தக்கபலியை செலுத்துகிறவர்களாய் இருப்போம். நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று எபிரெயர் 13 : 16 கூறுகிறது. நாம் நமது ஆசிர்வாதங்களையும், நேரத்தையும் மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்தும்போது, ​​நாம் தேவன் ஏற்கத்தக்கபலியை செலுத்துகிறவர்களாய் இருப்போம்.

நமது வாழ்நாட்களில், தேவன் நம்மை வழிநடத்தி, பயன்படுத்தி அவருக்கு உகந்த பலியாக நம்மை அர்ப்பணிக்க தேவன் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துவராக. ஆமென். 
 

 
தேவனுடன் நடப்பது 
 
ஆதியாகமம் 5:24-யில், ஏனோக்கு தேவனுடன் நடந்ததாகவும், மரணத்தை ருசிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் வாசிக்கிறோம். பழைய ஏற்பாட்டில், மரணத்தை ருசிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட இருவரில், இவரும் ஒருவர். அவரது வாழ்க்கை முறையைப் பற்றி, எபிரேயர் 11:5 குறிப்பிடும் போது, ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்ந்ததாக, அந்த நிருபத்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். தேவனுடன் நடப்பது என்பது பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவது என்பதால், அது நம் வாழ்க்கை முறையிலும், நடத்தைகளிலும் வெளிப்படும்.

மீகா 6:8-லிருந்து, நாம் நியாயஞ்செய்யவும், இரக்கத்தைச் விரும்பவும், தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவும் தேவன் விரும்புகிறார் என்று புரிந்துகொள்கிறோம். நாம் தேவனுடன் நடக்கும்போது, ​​நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மில் தேவனின் அன்பையும், வல்லமையும் காண்பார்கள். நாம் அன்பானவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் இருப்போம். தேவனுடன் நடக்கும்போது, அவர் வழங்கும் பரிசுத்த வாழ்க்கை நம்மில் வெளிப்படும். நாம் தேவனுடன் நடப்பதாகக் கூறிக்கொண்டு, உலகத்திற்கொத்த வாழ்க்கை வாழ்ந்தால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தேவன், நாம் அனைவரும் அவருடன் நடக்க விரும்புகிறார். தேவனுடன் நடப்பவரின் வாழ்க்கை, அவரோடு நடக்காதவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கும். தேவனுடன் நடப்பது என்பது, தேவன் மீது நாம் வைக்கும் விசுவாசம், தேவனுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடனான ஐக்கியத்தைக் குறிக்கிறது. தேவனுடன் நடப்பது என்பது அனுதினமும் அவருடனான ஐக்கியத்தில் நிலைத்திருப்பதாகும்.

தேவனுடன் நடப்பது என்பது, ஏதோ ஒரு நாள், தேவனுடன் செலவழித்து விட்டு மற்ற நாட்களில் நம் இஷ்டம் போல வாழதுடிக்கும் வாழ்க்கைமுறை அல்ல. தேவனுடன் நடப்பது என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நம் தெரிந்தெடுப்புகள் மூலம் தேவனை மகிமைப்படுத்துவதாகும். நாம் தேவனுடன் நடப்பதாகக் கூறினால், தேவனுடன் நேரத்தைச் செலவிடவும், நம் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். ஏனோக்கு, அக்காலத்தில் மற்றவர்களுடன் ஒரு சராசரியான வாழ்க்கை வாழ்ந்தாலும், தேவனுடன் நடக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடிந்தது. தேவனுடன் நாமும் இந்நாட்களில் நடக்க முடியுமா எனச் சிந்திக்கத் தோன்றும்.

ஏனோக்கைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அவரால் தேவனுடன் நடக்க முடிந்திருந்தால், நம்மாலும் முடியும். தினமும் தேவனுடன் நடக்கத் தொடர்ந்து முயற்சி செய்யத் தேவன் நமக்கு உதவி செய்வாராக. 
 

 
தேவவார்த்தைக்குக் கீழ்ப்படியாதிருக்கச் சோதிக்கப்படும்போது.
 
ஆதியாகமம் 3:11,யில் "புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ" என்று எழுதப்பட்டுள்ளது. நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிட்டபோது, ​​அவர்கள் நிபந்தனையின்றி அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேவனின் வார்த்தையைச் சந்தேகித்துக் கீழ்ப்படியாமல் போகச் சர்ப்பத்தால் சோதிக்கப்பட்டபோது, ​​ஏவாள் அந்தச் சோதனையில் தோல்வியடைந்தாள். முதலாவதாக, ஏவாள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தாள். தடைசெய்யப்பட்ட மரத்தின் அருகே ஏவளைக் கண்டச் சாத்தான், அந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். சர்ப்பமானது ஏவாளுடன் பேச்சைத் தொடங்கி, தன் தந்திரத்தில் விழும்படி தூண்டினான். ஏவாள் சாத்தானின் தந்திரத்தைத் துவக்கத்திலேயே கண்டறிந்து அவனின் ஆலேசனையை புறக்கணித்திருக்க வேண்டும்.

ஆனால், அவள் சர்ப்பதுடனான உரையாடலை ரசித்து, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடித்த அந்த எதிரியை நம்பி, அவனின் சாதுரியமான பேச்சில் விழுந்துத் தேவவார்த்தைக்குக் கீழ்படியாமல் போனாள். நாமும் தனியாக இருக்கும்போது, பிசாசால் எளிதில் தாக்கப்படலாம். நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு விசுவாசிகளின் ஐக்கியம் ரொம்ப அவசியம். நாம் ஐக்கியத்தில் இல்லாதிருக்கும் போது, ​​எளிதில் நாம் சோதனையில் விழ நேரிடும். இரண்டாவதாக, சர்ப்பம் ஏவாளின் மனதில் ஒரு சந்தேகத்தை விதைத்து, பின்னர்த் தேவனின் வார்த்தைக்கு எதிராகக் கவர்ச்சிகரமான தவறான விளக்கம் வழங்குவதை நாம் கவனிக்கிறோம். இவ்வாறே, சாத்தான் நம் வாழ்விலும், முதலில் தேவவார்த்தைகளுக்கு மாறானச் சந்தேகத்தை விதைத்து, வேதாகமத்தின் உண்மைகளைக் கேள்விக் கேட்கப் பண்ணி, நம்மை வஞ்சித்துத் தேவனுடைய வார்த்தைகளை மீறச் செய்வான்.

தேவனின் வார்த்தையைப் பற்றிய நமது சந்தேகங்கள் நம்மைத் தேவனிடமிருந்து விலகிப் போகப் பண்ணும். தேவவார்த்தையினால் நம் சிந்தனைகள் நிறைந்திருக்கும் போது அவிசுவாசத்தால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும், சந்தேகங்கள் ஏற்படும் போது நாம் தேவனுடைய உதவியை நாடினால், ​​சரியான நேரத்தில் சரியான வழிகளில் அவர் நம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவார்.

நமது கிறிஸ்தவ வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஐக்கியத்தின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ளவும், நாம் வாழ்வில் சந்தேகங்கள் நடுவே பயணிக்கும் போது தேவனின் உதவியை நாடவும் தேவன் நமக்கு உதவிச் செய்வாராக. 
 

 
திருமணம்
 
ஆதியாகமம் 2:24-ல், "ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்திருக்கிறான், அவர்கள் ஒரே மாம்சமாவார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. இது ஒரு புதிய, சுயாதீனமான குடும்ப அமைப்பு நிறுவுவதைக் குறிக்கிறது. ஆதாமுக்காக ஏவாளைப் படைத்தபோது, ​​தேவன் ஒரு சரியான இணையை வடிவமைத்தார். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, தோளோடு தோள் கோர்த்து, ஒருவரையொருவர் பூர்த்தி செய்து, தங்கள் தனித்துவமான பலங்களுடன் ஒருவருக்கொருவர் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே தேவனின் திட்டமாகும். இங்கே, திருமணத்தை தேவனால் நிறுவப்பட்ட மற்றும், தேவ சித்தத்துக்குட்பட்ட அமைப்பாக நாம் காண்கிறோம். மனித வாழ்க்கைக்கான அடித்தளமாகவும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான புனித உடன்படிக்கையாகவும் திருமணத்தை வேதாகமம் முன்வைக்கிறது. திருமணம் தனிநபர்களுக்கு தோழமை மற்றும் ஆதரவை வழங்குகிறது.

வேதாகமம் ஒருதார மணம் பற்றி போதித்தாலும், வேதாகமத்தில் பலரின் வாழ்க்கையில், பலதார மணம் பரவலாக இருந்தது. ஆனால், தேவன் பலதார மணத்தை அங்கீகரித்ததாக வேதாகமத்தில் நாம் வாசிக்கவில்லை. நம்மைப் குறித்த தேவ சித்தம் ஒருதார மணமே ஆகும். ஒரே உடலாக, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் குடும்பமாக மாறி, இணைக்கப்பட்டிருப்பது, அந்த இணைப்பால் வரும் அனைத்து சட்ட மற்றும் உறவு உரிமைகள் சார்ந்த சலுகைகளுடன், மரணம் வரை திருமணம் ஒரு நிரந்தர பிணைப்பாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. ஆதாமைப் போலவே, பெண்ணும் தேவனின் சாயலைப் பகிர்ந்து கொள்கிறாள். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக மனித குடும்பத்திற்கு தனித்துவமான மற்றும் அவசியமான பண்புகளைக் கொண்டு வருகிறார்கள்.

நம் வாழ்க்கைத் துணையின் வேறுபாடுகளை, தேவன் நம் வாழ்வில், தான் விரும்பும் நபர்களாக நம்மை வடிவமைக்க பயன்படுத்தக்கூடும். தேவன் நம் வாழ்வில் அளித்துள்ள வாழ்க்கை துணையை தேவனுடைய அன்பான பரிசாக நாம் ஏற்றுக் கொள்ள தவறும் போது, பல சிக்கல்களை நம் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும். கணவன்-மனைவி உறவு, இரண்டு மெழுகுவர்த்திகள் ஒன்றாக எரிந்து அதிக ஒளியை கொடுப்பது போலவும், இரண்டு நன்கு இசைக்கப்பட்ட கருவிகள் ஒன்றாக ஒலித்து மெல்லிசையை உருவாக்குவது போலவும் உள்ளது. திருமண உறவை, கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இடையிலான உறவுக்கு ஒப்பிட்டு குறிப்பிடுவதை நிருபங்களில் நாம் வாசிக்கிறோம்.

திருமணத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை தியாகத்துடன் நேசிக்க அழைக்கப்படுகிறார்கள், மேலும் மனைவிகள் தங்கள் கணவர்களை மதிக்கவும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தேவன் நம்மை அவரை மையமாகக் கொண்டு, தேவ சித்தத்தை நோக்கமாகக் கொண்ட குடும்பமாக வாழ ஆசீர்வதிப்பாராக. 
 

 
வேலை
 
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார், என்று ஆதி 2:15-ல், வாசிக்கிறோம். தேவன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் வேலை செய்ய வைத்தபோது, ​​தேவனின் படைப்பைக் கவனித்துக்கொள்கிற வேலையைக் கொடுத்தார். தேவன் மனிதனையும், மனிதனுடன் அவனுக்கான வேலையையும் உள்ளடக்கியே உலகத்தையே படைத்தார். நாம் வேலை செய்ய வேண்டும் என்ற தேவனின் விருப்பத்தை இது எடுத்துரைக்கிறது. தேவ குமாரனாகிய இயேசுவும் ஒரு தச்சனாக வேலைச்செய்தார். பவுல் தன்னுடைய ஊழியத் தேவைகளை சந்திக்க, கூடாரம் செய்பவராக வேலை செய்தார்.

தெசலோனிக்கேய சபையில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்பட்ட பவுல் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று திட்டவட்டமாகக் கட்டளையிட்டிருக்கிறார். தவறான முறையில் சம்பாதிக்காமல் தனது தேவைக்கும், குறைச்சலுள்ளவனுக்குக் உதவவும், தன் கைகளினால் நலமான வேலைசெய்ய பிரயாசப்படக்கடவன் என்று பவுல் எபேசு சபைக்கு எழுதுகிறார். செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் என்று பிரசங்கி 9:10 போதிக்கிறது.

ஏதேனில், வேலை சாபமானதாக அல்ல கெளரவமானதாகக் காணப்பட்டது. தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறன்கள், திறமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குகிறார். வேலை என்பது நம்மைக் குறித்த தேவ சித்தத்தின் ஒரு பகுதியாகும். நமது குடும்பம், சபை, பணி மற்றும் சமுதாய அந்தஸ்து என்பவைகளை பொறுத்து நம்முடைய வேலை அமைந்துள்ளது. அப்பொறுப்புகளை நிறைவேற்ற நாம் உண்மையுடனும் முழுவிருப்பதுடனும் நமது வேலைகளை செய்ய வேண்டும். எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல்,

கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் என்று கொலோசெயர் 3 : 24 அறிவுறுத்துகிறது. நமது பணிகளைச் சிறப்பாகச் செய்யத் தேவன் நமக்கு உதவி செய்வராக. 
 

 
ஓய்வு
 
ஆதியாகமம் 2:3-ல், சிருஷ்டிப்பின் ஏழாவது நாளைத் தேவன் ஓய்விற்காக அமைத்ததாக நாம் வாசிக்கிறோம். சிருஷ்டிப்பில், தேவன் பகலில் ஒரு பாதியை இரவாக வைத்திருந்தார், இது ஓய்வெடுப்பதற்கான நேரம்.

வேதாகமத்தில், சிருஷ்டிப்பில் ஏழு நாட்களில் ஒரு நாளை, அவர் ஓய்விற்காக நியமித்தார். இது பூமியில் நாம் வாழும்போது வேலை மற்றும் ஓய்வுக்கான ஒரு முறை உள்ளது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. நம் வாழ்வில் ஓய்வின் முக்கியத்துவம் என்ன என்பதும் தேவனின் பார்வையில் நமக்கான ஓய்வு ஏவ்வாறு உள்ளது என்பதையும் இதன்மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

வாரத்தில் ஒரு நாளைக் ஓயவு நாளாகக் கடைப்பிடிப்பது நமது வழக்கமான வேலையைகளிலிருந்து ஓய்வெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஓய்வு நாளைக் கிரமமாய் கடைபிடிப்பது - உடலுக்கு உழைப்பிலிருந்து ஓய்வும் ஆன்மாவிற்கு கவலைகளிலிருந்து ஓய்வும் அளிக்கின்றது. ஒவ்வொரு ஏழாவது நாளையும் ஓய்விற்காகக் கடைப்பிடிப்பது தேவனின் நோக்கம். நம் உடல்நலத்திற்காய் நம் நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்திற்காக ஒதுக்க வேண்டும் என்று நமக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. நமது உடல் மற்றும் ஆன்மாவின் சரியான செயல்பாட்டிற்கு நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் சரியான ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு உணர்ச்சி மற்றும் உடல் சார்ந்த நல்வாழ்வை ஊக்குவிக்கிறது.

ஓய்வு செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது. ஓய்வு எடுப்பது என்பது நமக்கான தேவனின் வடிவமைப்பு மற்றும் திட்டமாகும். வேலையிலிருந்து ஓய்வு எடுப்பது பத்து கட்டளைகளில் ஒன்றாகும். ஓய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை உண்மையாகக் கடைப்பிடிக்க தேவன் நமக்கு உதவுவாராக. 
 

 
தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
 
நம்மைச் சுற்றியுள்ளவைகள், அறிவாற்றல் மற்றும் சக்திவாய்ந்த ஒரு சிருஷ்டிகரை சுட்டிக்காட்டுகின்றன. காணக்கூடியவைகள் மற்றும் காணக்கூடாதவைகளை ஆகிய யாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து தேவன் ஆதியிலே சிருஷ்டித்தார். தேவன் மனுக்குலத்தை தேவனின் சாயலிலும், ரூபத்திலும் படைத்ததே சிருஷ்டிப்பில் மிக முக்கியமான பகுதியாக கருதலாம். நமது உடல் பூமியிலிருந்து வந்திருந்தாலும், நம்மில் ஆவிக்குரிய தன்மைகள் உள்ளன. மனிதர்களாகிய நாம்
 
பூமிக்குரிய பொருளாலும், ஆவிக்குரிய பொருளாலும் படைக்கப்பட்டு உள்ளோம்.

நம்மில் உள்ள ஆவிக்குறிய பகுதி, நம்மை தேவனுடன் இணைக்க வல்லது. தேவனுடன் சரியான ஐக்கியத்தைப் பேணுவதன் மூலம், வாழ்க்கையில் நாம் முழுமையைக் அடையலாம். நம் சிருஷ்டிகரிடம் நமது உறவும் ஐக்கியமும் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே நம்மை குறித்த நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் நாம் புரிந்துகொள்ள முடியும். ஜெபத்தில் நேரத்தை செலவிடுவதும், வேதபுத்தகத்தின் உண்மைகளை புரிந்த கொள்ள நாம் தொடர்ச்சியாக மேர்கொள்ளும் முயற்ச்சிகளும் நம்மை தேவனுடனான ஜக்கியத்தில் வளரச் செய்வதோடு, நமது வாழ்வில் நல்ல மாற்றத்தையும் கொண்டு வரும்.

தேவ நோக்கத்திலிருந்து நம்மை விலக்கிச் செல்ல செய்யும் இவ்வுலக ஈர்ப்புகள் மற்றும் தாக்கங்கள் நிறைந்த உலகில், தேவனுடனான ஐக்கியமும், தேவனை சார்ந்த வாழ்க்கை முறையும், தேவனின் வழிகளில் நம்மை உருவாக்கும். தேவனுடனான ஐக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், நமது சிருஷ்டிகர் உடனான ஐக்கியத்தில் வளர முயற்சிகளை மேற்கொள்ளவும் தேவன் நமக்கு உதவி செய்வராக.